யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதலுடன், இ யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் (சிறப்புத் திட்டங்கள்) திரு. எஸ். எஸ். கொடகண்டா ஆராய்ச்சிகே, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் (சிறப்புத் திட்டங்கள்) திரு. எச். கே. எஸ். எஸ். குணசேகர, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் திருமதி பிரசாந்தி சங்கர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். சிறிவாகீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கூட்டத்திற்கு வருகை தந்த கௌரவ அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டத்தின் போக்குவரத்து தொடர்பான முன்னேற்றங்களை அமுல்படுத்துவதற்கும், போக்குவரத்து தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்து கையாள்வதற்குமான போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\ \\
இதன் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இக் கூட்டத்தில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் அவர்கள் கலந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் அனைவரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்படலாம், மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்ந்த நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்கலாம், அதேபோன்று வீதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் எவ்வாறு கூடுதல் அக்கறை செலுத்தி, மாவட்டத்தை போக்குவரத்துத் துறையில் சிறந்ததும் ஆரோக்கியமானதுமான மாவட்டமாக மாற்ற முடியும் என்பதற்காக அனைவரின் ஒத்துழைப்பையும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் யாழ்ப்பாண போக்குவரத்து உபகுழுக் கூட்டத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கைகளையும், மத்திய அரசாங்கத்தின் வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக இக் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது சர்வதேச சூழ்நிலைகளின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வீதிகளுக்குத் தேவையான தார் கொள்வனவு குறைவடைந்துள்ளதாகவும், அதனால் வீதி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். எனினும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மீண்டும் நிதி அமைச்சிற்கு திரும்பிச் செல்லாமல், மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் வீதி தேவைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கி திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். வீதி அபிவிருத்தி தொடர்பான தேவைகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆரம்ப காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய அனைத்து வீதிகளும் தரமான வீதிகளாக அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி, முன்னுரிமை அடிப்படையில் வீதிகளின் விபரங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் தொடர்பான விபரங்களை கல்வித் திணைக்களங்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. விசேட தினங்களில் நயினாதீவு கடற்போக்குவரத்து படகுச் சேவையை அதிகரிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் எனக் குறிப்பிட்டார். தற்போது வீதிப் பணிகளுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், வீதிகளை புனரமைப்பதற்குத் தேவையான உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் வீதிப் பணிகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) முன்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார். முன்னைய காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்திப் பணிகளை முன்மாதிரியாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும் என்றும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளின் புனரமைப்பு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள், இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் நிறைவு பெறாத வீதிகளின் மதிப்பீடு, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், புகையிரதத் திணைக்களத்தின் சேவைகள், இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள், ஆளணி, கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அபிவிருத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வீதிகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு இக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதுடன், அவற்றிற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இறுதி அனுமதி பெறவும் தீர்மானிக்கப்பட்டது.