தனது தந்தை காலமானதைத் தொடர்ந்து, தனது கால்பந்து பயணத்தைத் தொடர்வது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
“நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை; எப்படி முன்னோக்கிச் செல்வது என்றும் புரியவில்லை. நான் கால்பந்து மட்டுமே விளையாடினேன், இப்போது இன்னும் எவ்வளவு காலம் அதைத் தொடர்ந்து செய்வேன் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன” என்று 39 வயதான மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் அஞ்சலிப் பதிவில் உருக்கமாக எழுதியுள்ளார்.
“ஆரம்பத்திலிருந்தே என் பக்கத்தில் இருந்தீர்கள்; இறுதிவரை வர இன்னும் மிகச் சிறிய தூரமே எஞ்சியிருந்தது. நாம் ஒன்றாக இதை முடிக்கும் வரை உங்களால் ஏன் இன்னும் கொஞ்ச காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை?” என்றும் அவர் அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெஸ்ஸியின் ஆரம்பகால பார்சிலோனா வாழ்க்கை முதல், அவரது கால்பந்து பயணம் முழுவதிலும் அவரது தந்தை ஜோர்ஜ் உடன் இருந்துள்ளார். அவர் ஒரு முக்கிய ஆதரவுத் தூணாகச் செயல்பட்டதுடன், பல ஆண்டுகள் மெஸ்ஸியின் முகவராகவும் பணியாற்றினார்.
தனது தந்தையின் விருப்பமாக இருந்த காரணத்தினாலேயே தான் 2026 உலகக் கிண்ணத்தில் விளையாடியதாக மெஸ்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.