மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலை மூடப்பட்டதன் காரணமாக ஸ்பிரிங்வெளி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்பிரிங்வெளி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த நோயாளர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது குறித்து பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தனவிடம் வினவியபோது, வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக அந்தப் பிரதேசத்தில் உள்ள அபயபுர சனசமூக மண்டபத்தில் வெளிநோயாளர் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் அபாய நிலை குறித்து மேலும் ஆராய்ந்து, வைத்தியசாலையின் ஒரு பகுதியையாவது அதே இடத்தில் தொடர்ந்து நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தற்காலிகமாக வெளிநோயாளர் சிகிச்சை நடைபெறும் இடத்திற்குச் செல்ல முடியாதவாறு வீதி தடைப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.