இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 ஓட்டங்களால் மாத்திரம் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது.
இந்தியாவும் அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 26 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.
முதல் நாளான நேற்றைய தினம் 11 விக்கெட்களும் இன்றைய தினம் 15 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் கழுத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக 4 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார்.
இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பெற்ற 39 ஓட்டங்களே இதுவரை துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.
போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.
இது தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 159 ஓட்டங்களைவிட 30 ஓட்டங்கள் அதிகமாகும்.
இந்தியாவின் முதலாவது இன்னிங்ஸில் ராகுலை விட வொஷிங்டன் சுந்தர் (29), ரிஷாப் பான்ட் (27), ரவிந்த்ர ஜடேஜா (27) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் சைமன் ஹாமர் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
30 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா பெரும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது.
அணித் தலைவர் டெம்பா பவுமா மாத்திரமே மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
அவரை விட மாக்கோ ஜென்சன் (13), ரெயான் ரிக்கில்டன் (11), வியான் மெல்டர் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அவர் 6 ஓவர்களை மாத்திரமே வீசினார்.
உபாதைக்குள்ளான ஷுப்மான் கில் களத்தடுப்பில் ஈடுபடாததால் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷாப் பான்ட் தனது சுழல்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார்.
ரவிந்த்ர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.