கிளிநொச்சியில் புதிய மின் இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மின் விநியோக சேவைகள் நிலையத்தில் கட்டணம் செலுத்தி பல மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை மின் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அவசரத் தேவைகளுக்காக மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இணைப்புக்கட்டணமாக 42,000 ரூபாய் செலுத்தியும் தமக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டணத்தைச் செலுத்திய பின்னர், இது குறித்து அறிவதற்காகப் பல தடவைகள் இலங்கை மின் விநியோக சேவைகள் நிலையத்திற்கு சென்று வினவியபோதெல்லாம், மின் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான பொருட்கள் இல்லை என்ற ஒரே பதிலையே அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிளிநொச்சி பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இவ்வாறு பணத்தைச் செலுத்திவிட்டு, பல மாதங்களாக மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கிளிநொச்சி இலங்கை மின் விநியோக சேவைகள் நிலையத்தின் பொறுப்பான அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் இணைப்பு வழங்குவதற்குத் தேவையான வயர், தூண் மற்றும் ஏபிசி பண்டல் வயர் என்பன இல்லாத காரணத்தால் மின் இணைப்பை வழங்க முடியாதுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.