பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்டு, புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,
வரிச்செலுத்தும் மக்களுக்கும், பொதுத் திறைச்சேரிக்கும், அரச வங்கிகளுக்கும் பாரிய செலவினச் சுமையாக மாறியுள்ள இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க (திருத்த) மின்சார சபைச் சட்டத்தின் பிரகாரம் , 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சபை சட்டத்தின் முதலாவது உப பிரிவின் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கு அமைய, 17 ஆவது உறுப்புரைக்கமைய, இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும்.
புதிய மறுசீரமைப்பைத் தொடர்ந்து நேஷனல் சிஸ்டம் ஒபரேட் (பிரைவெட்) லிமிடெட், நேஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் (பிரைவெட்) லிமிடெட், எலெக்ட்ரிசிட்டி ஜெனரேசன் (பிரைவெட்) லிமிடெட், எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபூசன் (பிரைவெட்) லிமிடெட்,
எனெர்ஜி வென்டேர்ஸ் லங்கா (பிரைவெட்) லிமிடெட், சி.இ.பி எம்ப்லோயீஸ் (பிரைவெட்) லிமிடெட், என்ற அடிப்படையில் புதிதாக 6 நிறுவன கட்டமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றார்.