நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் விவசாயிகளின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய கொள்கையை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
மானிய அடிப்படையில் முற்கூட்டியே உரக்கொடுப்பனவுகளைப் பெறும் விவசாயிகள் தங்கள் பயிரிடல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தவறும் பட்சத்தில் ஏனையை கொடுப்பனவுகளை நிறுத்திவைக்கவும், அபராதங்களை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும், மானிய உதவியின் கீழ் நேரடியாக விவசாய உற்பத்திகளை உறுதி செய்வதற்குமாக அரசாங்கம் முக்கிய கொள்கைத் தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் அடுத்த பயிர்ச்செய்கைக்கான பருவ காலத்திலிருந்து திருத்தப்பட்ட கொள்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் மானிய அடிப்படையில் உரங்களைப் பெறுகின்றபோது அவர்களுக்கான மானியத்தின் முதற் தவணைத்தொகை முன்கூட்டியே வைப்பிலிடப்படுகின்றது.
எனவே அவர்கள் மானியத்தின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு முன்னதாகவே பெறுகிறார்கள். இருப்பினும், முற்கூட்டியே பணம் பெறும் முறைமையானது அபாயங்களைக் கொண்டுள்ளது. மானியத்தின் முதலாவது தவணைப் பணத்தைப் பெறும் விவசாயிகளில் சிலர் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு தவறலாம்.
இச்செயற்பாடுகள் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றபோது அது மோசடியாகும். ஆகவே இத்தகைய துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்காக மானியத் தொகையின் முதற்தவணைப் பெற்று பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்காதவர்களுக்கு எதிராக அபராத பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு விவசாயி மானியத்தின் முதற் தவணையை பெற்றுக்கொண்டு பயிரிடத் தவறினால், அப்பருவத்திற்கான மீதமுள்ள கட்டணத்தை அரசாங்கம் நிறுத்தி வைக்கும். அரச நிதியை ஏற்றுக்கொண்ட பிறகு பயிரிடத் தவறுவது பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதற்குச் சமமாகும் என்றார்.