கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (23) காலை 6:00 மணி முதல் வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீட்டுப் பணிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான தரிப்பிடக் கட்டணங்களை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்திருந்த நிலையில் மீண்டும் கட்டணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று (23.03.2026) முதல் மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 18ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை வாகனத் தரிப்பிடக் கட்டண அறவீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR முறைமை மற்றும் ஒற்றை / இரட்டை இலக்க முறைமை ஊடாக எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு, மீண்டும் கட்டணங்களை அறவிடுவது குறித்து கொழும்பு மாநகர சபை அவதானம் செலுத்தியிருந்தது.
அதற்கமைய, இன்று முதல் வாகனத் தரிப்பிட முகாமைத்துவமும் கட்டண அறவீடும் வழமை போன்று இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.