அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பை மீறி இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைக்கு வவுனியா நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) வவுனியா மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால், நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட 67ஆம் இலக்க பணிப்புரையின் அடிப்படையில் இச்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையொன்று, முழு இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணமான 400 ரூபாயை விட அதிகரித்து 550 ரூபாய் வசூலித்துள்ளமை கடந்த ஜூலை 14ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஜூலை 28ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த மருத்துவமனைக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் தனியார் மருத்துவமனைகள் அல்லது பரிசோதனைக் கூடங்கள் குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் புகாரளிக்குமாறு நுகர்வோரை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.