கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தல் கருத்துகளைத் தொடர்ந்து, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் அரசுமுறைப் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுவரை அந்தப் பயணம் குறித்து எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
எனினும், லிபரல் டெமோக்ராட் கட்சித் தலைவர் எட் டேவி, ட்ரம்ப் தொடர்ந்து கிரீன்லாந்தை மிரட்டும் நிலை நீடித்தால், ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் நடத்தப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரச்சாரம் செய்து வரும் ‘ரிபப்ளிக்’ அமைப்பும், இந்த அரசுமுறைப் பயணத்தை நிறுத்த வேண்டும் என கோரியுள்ளது.
அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிரேயம் ஸ்மித் கூறுகையில், “அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பை சந்திக்க கிங் சார்ல்ஸ் செல்வது, ட்ரம்பின் அரசியல் நோக்கங்களுக்கு உதவுவதோடு, பிரித்தானியாவை பலவீனமானதும் அடிமைபோன்றதுமான நிலைக்கு தள்ளும்” என தெரிவித்துள்ளார்.
கிங் சார்ல்ஸ் அமெரிக்கா செல்ல வேண்டுமா இல்லையா என்பது பக்கிங்ஹாம் அரண்மனையின் தீர்மானம் அல்ல; அது முழுமையாக அரசாங்கத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.