ஜெனீவா நகரில் “மனிதநேய நெறிமுறைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நெருக்கடி காலங்களில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளின் கீழ் 2025 ஒக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெற்ற 151வது அனைத்துப் பாராளுமன்றங்களின் ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் கலந்துகொண்டனர்.
தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான சவால்களின் பின்னணியில், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாத்தல், பல்தரப்பட்ட உறுதிப்பாடுகளை வலுப்படுத்தல், மற்றும் மோதல் மற்றும் நெருக்கடி காலங்களில் பயனுள்ள மனிதாபிமானப் பதிலளிப்பை உறுதிசெய்தல் என்பவற்றில் பாராளுமன்றங்களின் பங்கு குறித்து கலந்துரையாடும் வகையில் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான சட்டவாக்க உறுப்பினர்களை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தலைமையில் இலங்கை பாராளுமன்றக் குழுவினர் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
விவாதத்தின்போது உரையாற்றிய பிரதி அமைச்சர் சுனில் வடகல, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் நெருக்கடி முகாமைத்துவத்தில் இலங்கையின் அனுபவத்தை சுட்டிக்காட்டினார். 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வை இலங்கையின் மீள்தன்மை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பின் இன்றியமையாத பங்கினை அடிக்கோடிட்டுக் காட்டிய ஒரு தருணமாகக் குறிப்பிட்ட அவர், தயார்நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் மனிதாபிமான நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“காலநிலை மற்றும் சுத்தமான காற்றுக்காக மீத்தேன் வாயுவைக் குறைத்தலுக்கான தகுந்த கவனம் கிடைக்கிறதா?” என்ற தலைப்பிலான செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் கலந்துகொண்டார். அவர் தனது கருத்துக்களில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கார்பன் பூஜ்ஜியம் 2050 வழிகாட்டி மற்றும் மூலோபாயத் திட்டம், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் போன்ற தேசிய முயற்சிகளையும், 2050ஆம் ஆண்டளவில் கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான நாட்டின் உறுதிமொழியையும் அவர் எடுத்துரைத்தார். அபிவிருத்தி மற்றும் தலைமுறைக்கு இடையேயான பொறுப்பு குறித்த தேசத்தின் நோக்கை இலங்கையின் சுற்றாடல் கொள்கைகள் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவுப் பாதுகாப்பு, இடம்பெயர்வு, காலநிலை பற்றிய நடவடிக்கை மற்றும் பாராளுமன்ற மேற்பார்வை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த இலங்கையின் நிலைப்பாடுகளை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மாநாட்டின் அங்கமாக இடம்பெற்ற பாராளுமன்ற செயலாளர் நாயகங்களின் சங்கத்தின் (ASGP) அமர்வுகள் மற்றும் தொடர்புபட்ட கூட்டங்களில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர கலந்துகொண்டார்.
இலங்கைக் குழுவினர், பெலாரஸ் குடியரசின் தேசிய சபையின் சர்வதேச விவகாரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கான நிலைக் குழுவின் தலைவர் செர்ஜி அலெனிக்கையும் சந்தித்தனர்.
குறிப்பாக மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இரு நாடுகளினதும் பாராளுமன்றங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவித்தல், உயர்மட்டப் பரிமாற்றங்களை ஏற்படுத்தல் மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துதல் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.