பணவீக்க மற்றும் நிதியியல் ஸ்திரத்தன்மைசார் இலக்குகள் அடுத்த வருடத்துக்குள் அடையப்படும் எனவும், தற்போது பதிவாகியுள்ள மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதமானது ஆரோக்கியமானதும், நிலையானதுமான மட்டத்தில் காணப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வருடாந்தம் மேற்கொள்ளப்படும் நிதியியல் முறைமை மீளாய்வு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கிலான செய்தியாளர் சந்திப்பொன்று வியாழக்கிழமை (23) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார வளர்ச்சி, பணவீக்க நிலைவரம் மற்றும் எதிர்கால எதிர்வுகூறல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி தற்போது அசாதாரண மட்டத்திலான பணச்சுருக்க நிலைமை பதிவாகியிருப்பதாகவும், இருப்பினும் மத்திய வங்கியினால் இலக்கிடப்பட்டுள்ளவாறு அடுத்த ஆண்டு பணவீக்கத்தை 5 சதவீத மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் என எதிர்பார்ப்பதாகவும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நிதியியல் ஸ்திரத்தன்மை குறிப்பிடத்தக்களவினால் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று ‘பொருளாதார மீட்சியைப் பொறுத்தமட்டில், பொருளாதாரமானது தொடர்ச்சியாக 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துவருகின்றது. 2022 – 2023 இல் முகங்கொடுக்கநேர்ந்த தீவிர நெருக்கடியின் பின்னர், இப்போது பதிவாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் ஆரோக்கியமான மட்டத்தில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்’ எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு முதன்நிலை மீதி மற்றும் வருமான இலக்குகள் உள்ளடங்கலாக முக்கிய நிதியியல் இலக்குகளைத் தாண்டும் நிலையில் இலங்கை இருப்பதாகவும், இது நாட்டின் கடன் ஸ்திரத்தன்மையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் 2025 இல் வாகன இறக்குமதிக்காக இலங்கையர்கள் சுமார் 1.5 பில்லியன் டொலர்களை செலவிடுவர் எனத் தெரிவித்த ஆளுநர் நந்தலால் வீரசிங்க, இது முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் உயர்வானதாகும் என்றார்.