போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன என தெல்லிப்பழை பொது சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும், விருது வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பரா. நந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கில் கல்வி, விளையாட்டுக்களில் மாணவர்கள் சாதனைகளைப் படைத்தாலும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் எங்களுடைய பிள்ளைகள் நிரம்பவில்லை என்ற ஏக்கம் உள்ளது.
இலங்கையில் சகல பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பு சகலருக்கும் சமனானது என்பதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஒரு காலம் தரப்படுத்தலுக்காக கிளர்ந்தெளுந்து 30 வருட போராட்டம் முதல் மீள்குடியேற்றம் வரை கண்டோம். ஆனால் இன்று தரப்படுத்தல் இல்லையேல் எங்களுடைய பல்கலைக்கழகமும் இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
இலங்கையிலுள்ள மிகப்பெரிய புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் மனநோய் வைத்தியசாலை தெல்லிப்பழையில் அமைந்துள்ளது. அங்கு தாதியர்களாகவோ ஏனைய துணை உதவியாளளர்களாகவோ பெரும்பாலும் வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள் இல்லாத நிலையுள்ளது. இதனால் மொழி தெரியாது அவர்களும் நோயாளிகளும் கஷ்டப்படும் நிலையுள்ளது.
ஆனால் தொலைபேசியில் மாற்றத்தை செய்துவிடலாம் என தொலைபேசியில் ஆர்ப்பாட்டத்தை செய்துகொண்டிருக்கிறோம். தற்போது அடிப்படை சித்தியுடனே தாதியர்களுக்கான படிப்பை மேற்கொள்ள முடியும். அதற்கு மாணவர்களை வழிகாட்டுவது அவசியமாகும்.
இதைவிட தற்போது போதைப்பொருளால் இளம் சமுதாயம் பாதிப்படைகிறது. நீண்டகாலமாக போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு நல்ல காலம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் முக்கியமான நடவடிக்கையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றது. சில வேளைகளில் உடனடியாக மாற்றங்கள் ஏற்படாது போயினும் நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.
கடந்த காலங்களில் இது தொடர்பில் ஒரு கட்டத்திற்கு மேல் செய்ய முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. எனத் தெரிவித்தார்.