நிந்தவூரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் (32 வயது) அல் மஸ்ஹர் வீதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சந்தேகநபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.