பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இன்று இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. 1983ல் ஆண்கள் அணி முதல் கோப்பை வென்றது போல, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதல் கோப்பை வெல்ல காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் இன்று நடக்கும் பைனலில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, லாரா வால்வார்ட் கேப்டனாக உள்ள வலிமையான தென் ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது.
லீக் சுற்றில் 7 போட்டியில் 3ல் மட்டும் வென்ற (3 தோல்வி, 1 முடிவில்லை) இந்தியா, அரையிறுதிக்கு முன்னேற பெரும்பாடு பட்டது. இதில் இமாலய ரன் ‘சேஸ்’ செய்து, 7 முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியாவை யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றியது.
ஜெமிமா நம்பிக்கை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89), விடா முயற்சியுடன் போராடிய ஜெமிமா (127*) அணி வெற்றிக்கு உதவினர். இன்று பைனலில் ஸ்மிருதி மந்தனா (8 போட்டி, 389 ரன்), மீண்டும் அணிக்கு திரும்பிய ஷைபாலி, நல்ல துவக்கம் தர வேண்டும். ரிச்சா (201), ஆல் ரவுண்டர் தீப்தி (157 ரன், 17 விக்.,), பலமாக திகழ்கிறார்.