” 2005 இல் புலிகளுக்கு நிதி வழங்கியமை மற்றும் 2009 இல் வழங்கப்பட்ட 48 மணிநேர போர் நிறுத்தம் உள்ளிட்ட தேசத்துரோக செயல்களுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறி ஆக வேண்டும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற விடயம் 2010 ஆம் ஆண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனினும், இது பற்றி எனக்கு 2008 ஆம் ஆண்டிலேயே தெரியவந்தது. பஸில் ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பொன்றின்போது அது பற்றி அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.
புலிகளுக்கு இவ்வாறு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது தேசத்துரோக செயல் இல்லையா? இந்த பணத்தை பயன்படுத்தியே கடற்புலிகளுக்கு படகுகள் வாங்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தியே 4 ஆம் கட்ட ஈழப்போரின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது கடற்படையின் 10 கப்பல்கள்வரை அழிக்கப்பட்டன.
கடற்படையினரும் உயிரிழந்தனர். எமது கடற்படையினருக்கு மஹிந்த ராஜபக்ச இழைத்த துரோகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேபோல 2009 இல் 48 மணிநேர போர் நிறுத்தத்தை மஹிந்த வழங்கினார்.
இதனால் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மார்ச் மாதம் முடியவிருந்த போர் மே மாதம் வரை நீடித்தது. ஆயுத இழப்பும் ஏற்பட்டது. இதற்கும் மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறவேண்டும்.” – எனவும் பொன்சேகா வலியுறுத்தினார்.