லிபியா நாட்டிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 3ஆம் திகதி, வட ஆப்பிரிக்க நாடான லிபியா நாட்டிலுள்ள Zuwara என்னுமிடத்திலிருந்து 47 ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் 49 பேருடன் புலம்பெயர்வோர் படகொன்று புறப்பட்டுள்ளது.
சில மணி நேரத்துக்குள் படகின் இயந்திரம் பழுதானமையால் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
இந்நிலையில், லிபியா அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் ஏழு பேர் மட்டும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 42 பேரைக் காணவில்லை. அவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்தப் படகில் பயணித்தவர்களில் 29 பேர் சூடான் நாட்டவர்கள், 8 பேர் சோமாலியா நாட்டவர்கள், மூன்று பேர் கேமரூன் நாட்டவர்கள் மற்றும் இரண்டு பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.