மட்டக்களப்பு, புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், கிராம உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் நேற்று (15) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, குறித்த கோரிக்கைகள் மற்றும் பாதிப்பின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் புன்னைச்சோலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணமோ அல்லது நிதியுதவியோ வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்ட மக்கள் புன்னைச்சோலை பகுதியில் ஒன்று திரண்டனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுகூடி, கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்தனர். இப்பேரணியானது மாமாங்கம் ஆலய வீதி, பார் வீதி, அரசடி சுற்றுவட்டம் மற்றும் நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வழியாகச் சென்று இறுதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து முற்றுகையிட்டது.
இவ்விடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். கிராம உத்தியோகத்தர் தொடர்பான புகார்கள் குறித்தும், நிவாரணம் தொடர்பாகவும் தீர்க்கமான விசாரணை செய்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு,
“தாம் பாதிக்கப்பட்டபோது கிராம உத்தியோகத்தர் தங்களைப் பார்வையிடவில்லை எனவும், அதனால் வெள்ள நிவாரணம் மற்றும் அரசாங்கக் கொடுப்பனவுகள் தமக்குச் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் மக்கள் முறையிட்டனர். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்போம். நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்தும் பரிசீலனை செய்து உரியவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வெகு விரைவில் ஏற்பாடு செய்வோம்” என தெரிவித்தார்.
மேலும், கிராம உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அவரது செயல்பாடு தவறாக இருக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளதை நாங்கள் அவதானித்துள்ளோம். கடந்த காலத்தில் மக்களின் நிதியை வீணடித்தவர்கள் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்கள் மக்களைத் தூண்டிவிட்டு இதுபோன்ற விஷமத்தனமான செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் ஊடாகத்தான் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை. நேரடியாக நீங்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதுவும் முடியவில்லை என்றால் அரசாங்க அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதுவும் இயலாவிடின் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். அரசாங்கம் என்ற ரீதியில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனத் தெரிவித்தார்.