மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவுப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில், ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஐடியினர் (CID) கைது செய்தனர்.
இந்த ஐந்து முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பாகப் பிள்ளையான், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் மற்றும் லண்டனில் வசிக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த ‘பொலிஸ் பாய்ஸ்’ உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 2026ஆம் ஆண்டு யூன் 17ஆம் திகதியன்று சிஐடியினர் வழக்குத் தாக்கல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேக நபர்களான பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலையிலிருந்து இணையவழி ஊடாகக் (Zoom) காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, இவர்களை எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கினை ஒத்திவைத்தார். அத்துடன், லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸுக்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து அவர் கட்டளையிட்டார்.