பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும் திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை எனத் தொழில் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்த நிலைமையைத் தகுந்த முறையில் சீர்செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்ற தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த உயர் டிப்ளோமா மற்றும் டிப்ளோமா தாரிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஒரு வருடகாலமாக எமது நாடு ஒரு புதிய பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் பௌதீக அபிவிருத்தியைப் போன்றே மனிதவள அபிவிருத்தியும் மிகவும் முக்கியமானது. நவீன உலகத்தை நாம் வெற்றிகொள்ள வேண்டுமாயின் புதிய பாதையில் மனித வளத்தை மேம்படுத்த வேண்டும். அதற்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
எந்தவொரு பிள்ளையையும் கைவிடாது அவர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான தொழில் வாழ்க்கையையும் சமூக வாழ்வையும் உறுதிப்படுத்துவதே இந்தப் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம்.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதில் முன்னோடியாக விளங்கும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் தற்போது 100-க்கும் மேற்பட்ட பாடநெறிகளை நடாத்தி வருகின்றது. இதில் 600-க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்கள் விரிவுரையாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.