தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள் பங்கேற்ற ஒரு அழகிப் போட்டி நிகழ்வில் மெக்சிகோ அழகி பாத்திமா போஷ், போட்டியின் மேற்பார்வையாளரால் “முட்டாள்” என்று கூறி அவமதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக பலவேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அழகிகள் பேங்கொக்கில் குவிந்துள்ளனர்.
இதனிடையே அழகிப் போட்டிகள் பங்கேற்கும் மற்றுமொரு போட்டி நிகழ்வொன்றில், அப்போட்டியின் மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில், போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.
பின், மெக்சிகோ அழகி பாத்திமா போஷை அழைத்து, விளம்பர படப்பிடிப்பில் கலந்துகொள்ளாததற்கு விளக்கமளிக்குமாறு கேட்டார். அவ்வேளை, பாத்திமா போஷ் பேச முற்பட்டபோது, அவரை “முட்டாள்” என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனையடுத்து, அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கேட்க, பாத்திமா போஷ், “நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும் எனது நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை” என கோபமாக கூறினார்.
இதையடுத்து, மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதற்காக மற்ற போட்டியாளர்களும் கோபமடைந்தனர்.
தான் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து, பாத்திமா போஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக பல நாட்டு அழகிகளும் வெளிநடப்பு செய்தனர். அதேவேளை தற்போதைய மிஸ் பிரபஞ்ச அழகி விக்டோரியாவும் அங்கிருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, போட்டி மேற்பார்வையாளர் நவத் கூறுகையில், அழகிகள் போட்டியிட விரும்பினால் இங்கே உட்கார வேண்டும் என்றார்.
எனினும், அவரது பேச்சை செவிமடுக்காத போட்டியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனால் அந்த அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பின்னர், நவத் மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மிஸ் பிரபஞ்ச அமைப்பு கூறுகையில், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மரியாதைக்குரிய தொழில்முறை சூழலை உறுதி செய்ய ஒரு மூத்த நிர்வாகிதாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது.