கடலூர்,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி, வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட திமுக நிர்வாகியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகப் பதவி வகித்து வருபவர் எம்.ஜி.ஆர்.விக்கி என்கிற விக்னேஸ்வரன் (33). இவர் நேற்று காலை 10 மணியளவில் பண்ருட்டி களத்துமேடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் சென்றுள்ளார்.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ரகசியமாகச் செல்போனை எடுத்துச் சென்ற விக்னேஸ்வரன், அங்குப் போட்டியிடும் திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் “பானை” சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவிட, அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
வாக்குப்பதிவின் ரகசியத்தைப் பாதுகாக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, பண்ருட்டி தொகுதி தேர்தல் அலுவலர் கமலம் காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரனை அதிரடியாகக் கைது செய்தனர். தேர்தலின் போது விதிமுறைகளை மீறி வீடியோ வெளியிட்டதற்காகத் திமுக நிர்வாகியே கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#CuddaloreNews #DMK #VCK #Panruti #TNElection2026 #ElectionRules #Arrested #PotSymbol #FacebookViral #VoteSecret #TamilPolitics #ElectionCommission #BreakingNews #TamilNaduElection #April23 #PoliceAction #LawAndOrder #Election2026 #SocialMediaCrime #Thirumavalavan