பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரித்தானிய பொலிஸார் பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு நேற்று (5) எச்சரித்துள்ளது.
இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரித்தானியாவில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, பிரித்தானிய இராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களை சேதப்படுத்திய ‘பலஸ்தீன் அக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மத்திய லண்டனின் டிராஃபல்கா் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் நேற்று முன்தினம் (4) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இனப் படுகொலையை எதிா்ப்பதாகவும், பலஸ்தீன் அக்ஷன் அமைப்பை ஆதரிப்பதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அவா்களில் 488 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு அமைச்சா் ஷாபனா மஹ்மூத் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
‘ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும்.
பெரிய அளவில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள், நாட்டில் உள்ள சில மக்களிடம் குறிப்பாக மதக் குழுவினரிடம் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.