நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது. அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதி எர்கு நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40 பேரை இந்த பயங்கரவாத கும்பல் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றதாகவும் அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பின்னர், எஞ்சிய 38 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) வடகிழக்கு நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் 5 பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டிருக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உயிருடன் மீட்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனையடுத்து, கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் துப்பாக்கிதாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்நாட்டு கிறிஸ்தவ சங்கம் நேற்று (23) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (21) மற்றும் சனிக்கிழமை (22) ஆகிய இரு தினங்களிலும் 10 – 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தனித்தனியாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் தமது பெற்றோர்களை சென்றடைந்துள்ளதாகவும் நைஜீரிய கிறிஸ்தவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இன்னும் 253 பாடசாலை மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.