பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் நேற்று(06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது.
அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர்.
இதில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமைகளுக்கான இயக்கம் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.