தற்போதைய சபைக் காலத்தில் யாழ்ப்பாணம் மாநகரத்தின் பிரதான சுற்றுலாத் தளமாக விரைவாக அபிவிருத்தியடைந்து வரும் பண்ணை கடற்கரை பூங்கா பகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைகள், குறித்த பகுதியை பெற்றுக் கொண்ட குத்தகைதாரர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்கள் களத்திற்கு நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார்.
மேற்படி விஜயத்தில் குத்தகைதாரரினால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்கு தேவையானதும், முக்கியமானதுமான அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்த முதல்வர், மாநகரசபையின் ஒப்பந்தம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சுற்றுலாப் பயணிகள் பயனடையக் கூடிய வகையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் குத்தகைதாரர்களுக்கு மாநகரசபையும் ஒத்துழைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
முதல்வர் மதிவதனி அவர்களின் தலைமையிலான தற்போதைய சபைக் காலத்தில் மாநகர பண்ணை கடற்கரை பூங்கா, பண்ணை கடற்கரை சிற்றூண்டிச்சாலை, ஆரியகுளம் மற்றும் யாழ்ப்பாணம் கோட்டை பகுதிகள் மாநகரசபையின் பிரதான அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பிரபலமான சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதம கணக்காளர், பிரதம வருமானவரி பரிசோதகர், வருமானவரி பரிசோதகர் மற்றும் குத்தகைதாரர் எனப் பலரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
.
முதல்வரின் ஊடகப்பிரிவு