அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தினால் நாளை (28) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தொடர் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கப்படவிருந்த இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்பை 48 மணித்தியாலங்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக அந்தச் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார பிரதி அமைச்சருக்கும் இடையில், பணிப்புறக்கணிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே இந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கடமைகளை மேற்கொள்ளும் வைத்தியர் ஒருவர் தொடர்பில் எழுந்த பிரச்சினையை முன்னிறுத்தியே சங்கம் இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், வைத்தியசாலையின் குறித்த பிரதிப் பணிப்பாளர் தொடர்பில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எடுக்கப்படும் தீர்மானத்தை அறிவிப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சுகாதார பிரதி அமைச்சர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் பிரதி அமைச்சர், அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சுகாதாரத் துறையில் தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளால் நோயாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 8 மணி வரை இந்தப் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தமது சங்கம் தீர்மானித்ததாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம மேலும் தெரிவித்தார்.