இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதை பங்களாதேஷ் அணி நிராகரித்ததன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் மூன்று வாரங்களாக நீடித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தியாவில் விளையாடுவதற்கு நம்பகமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவுமில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்தும் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்கு பங்களாதேஷ் அணி எதிர்ப்பு தெரிவித்ததால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை மேலும் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. அந்த வகையில் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு பங்களாதேஷ் அணி செல்வதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கையில் போட்டிகளை விளையாடுவதற்கு பங்களாதேஷ் அணி இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.