இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது.
டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.
ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது.
ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும்.
இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது.
பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது.
நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது.
அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது.
அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது.