முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன் தினம் (21.03.2026) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரால் நீண்ட காலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களின் முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரணைப்பாலை, மந்துவில், 9ஆம் வட்டாரம், சிவநகர் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மந்துவில் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து 20 பவுண் நகை மற்றும் தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளார்கள்.
இதன்போது கொள்ளையிடப்பட்ட தொலைபேசியினை சந்தேகநபர்கள் தங்கள் பாவனையில் வைத்திருந்த நிலையில் தொலைபேசியின் உரிமையாளர் கொடுத்த தகவலுக்கு அமைய தொலைபேசியின் அனைத்து இலக்கங்களும் வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு அந்த தொலைபேசியில் வேறு சிம் அட்டை ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த தொலைபேசி பாவனையினை வைத்தே கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையிட்ட நகைகள் அனைத்தும் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரால் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதுடன், விற்பனையும் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நேற்று (22.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது பெண் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.