ஒன்டாரியோ மாகாண அரசு, தகவல் அறியும் உரிமை (FOI) சட்டத்தை “நவீனப்படுத்தும்” பெயரில் மாற்ற முன்வந்துள்ளது. இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால், முதல்வர் டக் ஃபோர்டு மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களின் பதிவுகள் ரகசியமாக வைக்கப்படும். விமர்சகர்கள் கூறுவதாவது, இது அரசியல் செயல்முறைகள் குறித்து பொதுமக்கள் மேற்கொள்ளும் கண்காணிப்பை மிகவும் குறைக்கும் என்ற விமர்சனங்களோடு செய்திகள் வெளியாகியுள்ளன.
பொது மற்றும் வணிக சேவை வழங்கல் மற்றும் கொள்முதல் துறை அமைச்சர் ஸ்டீபன் கிராஃபோர்ட் இதற்கு பதிலளிக்கையில், திறந்த தரவு பட்டியல், ஒழுங்குமுறை அமைப்பின் ஆய்வு, மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன் முன்னாள் லிபரல் அரசின் நிதி தகவல்களை வெளியிட்ட நடவடிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தங்களின் அரசு “ஒன்டாரியோ வரலாற்றிலேயே மிகவும் வெளிப்படையான அரசுகளில் ஒன்றாகவே உள்ளது” என்று கூறினார்.
“நாங்கள் வெளிப்படைத்தன்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறோம்,” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த சட்ட மாற்றங்கள் பின்னோக்கியும் (retroactive) அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், கிரீன்பெல்ட் சர்ச்சை மற்றும் ஃபோர்டின் கைப்பேசி பதிவுகள் குறித்து தகவல் பெற முயலும் செய்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் பல வழக்குகள் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக, ஃபோர்டின் கைப்பேசி பதிவுகள் தொடர்பான நீதிமன்ற வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பதிவுகளை வெளியிடுவதைத் தடுக்க அரசு முயற்சி செய்து வருகிறது.
புதிய சட்டம் அமலுக்கு வந்தால், முதல்வர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உதவியாளர்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்களின் பதிவுகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இனி வராது. எனினும், அரசுத் துறைகளில் பணிபுரியும் பொது சேவையாளர்களிடம் இருக்கும் பதிவுகளை பொதுமக்கள் தொடர்ந்து கோர முடியும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
தகவல் மற்றும் தனியுரிமை ஆணையர் பாட்ரிசியா கோஸ்ஸெய்ம், முதல்வரின் கைப்பேசி பதிவுகளை கோரிய குளோபல் நியூஸின் ஆரம்ப கோரிக்கையை ஆதரித்தவர். சட்டத்தை பின்னோக்கி மாற்றுவது, “மேற்பார்வை அமைப்புகள் தடையாக இருந்தால், விதிகளை மாற்றிவிடலாம்” என்ற செய்தியை அனுப்புகிறது என்று அவர் கூறினார்.
“தகவல் அறியும் உரிமைச் சட்டங்கள், அரசு முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, எந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்றன, யார் அவற்றில் தாக்கம் செலுத்துகின்றனர், மற்றும் பொது நலன் பாதுகாக்கப்படுகிறதா என்பதைக் குறித்து ஒன்டாரியோ மக்களுக்கு அத்தியாவசிய தகவல்களை வழங்குவதற்காகவே இருக்கின்றன,” என்று கோஸ்ஸெய்ம் ஒரு அறிக்கையில் எழுதியுள்ளார்.
அமைச்சரவை விவாதங்கள் அல்லது அரசுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடிய பதிவுகள் தற்போதைய சட்டத்தின் கீழேயே ஏற்கனவே விலக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.