மனவளர்ச்சி குறைபாடு (ஒட்டிசம்) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது. அதற்கமைய, மேலெழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் ஆரம்பப் படிமுறையாக சர்வதேச தரநியமங்களுக்கு இணங்க மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையமொன்றை கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்திற்கு மேலதிகமாக, 25 மாவட்டங்களிலும் குறித்த நோய்களுக்கான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்ட முன்மொழிவு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டம் 3 கூறுகளைக் கொண்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிகிச்சைகளுக்கான நிலையங்களை அமைத்தல், மாகாண மட்டத்தில் சமுதாய தாய்சேய் நிலையத்தை நிறுவுதல் மற்றும் மாவட்ட மட்டத்தில் இயலளவு விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் என்பன அந்தக் கூறுகளாகும்.
அதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தின் கூறுகளை 2025-2027 இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.