இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தனது கடைசி லீக் போட்டியில் றினோன் கழகத்தை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்த்தாடிய அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் சுற்றில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையை தக்க வைத்ததுக்கொண்டது.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு கழகங்களும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது.
குறிப்பாக அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தின் வலதுகோடி முன்கள வீரர் மொஹமத் இஷான், மத்திய முன்கள வீரர் மொஹமத் ஆக்கிப், இடதுகோடி முன்கள விரர் நவீட் ஜூட் ஆகியோர் மிக வேகமாக பந்து நகர்த்தலிலும் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டு றினோன் கழகத்துக்கு சோதனையைக் கொடுத்தனர்.
எனினும் றினோன் பின்கள வீரர்களான கமீல் ஹக்கீம், நடீம் அஹமத், இம்மானுவேல் அனாஃபுல் ஆகியோர் தடுத்தாடலில் சிறப்பாக செயற்பட்டு கோல் போடப்படுவதைத் தடுத்தனர்.
எவ்வாறாயினும் போட்டியின் 40ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பந்தைப் பெற்றுக்கொண்ட ஆக்கிப் மிகவும் சாமர்த்தியாக றினோன் கழக பின்கள வீரர்களைப் பிரமிக்கச் செய்யும் வகையில் பந்தை சிப் (Chip) செய்தார்.
இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகத்தின் ஆட்டத்தில் சற்று தளர்வு ஏற்பட்டதுடன் மத்திய கள வீரர்களால் முறையான பந்து பரிமாற்றங்களில் ஈடுபட முடியாமல் போனது.
போட்டியின் 76ஆவது நிமிடத்தில் மொஹமத் இஷானின் கோர்ணர் கிக் பந்தை அப்துல் ரஹ்மான் யஹியா தனது தலையால் றினோன் கோலை நோக்கி முட்டிவிட்டார். றினோன் கோல்காப்பாளர் மொஹமத் ஹசன் அதனை தடுக்க முயன்றபோது பந்து அவரது கைகளில் பட்டு எகிறி வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மொஹமத் ஆக்கிப் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தி அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்தை 2 – 0 என முன்னிலையில் இட்டார்.
மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து தீரப்பாளர் மேசையை நோக்கிச் சென்ற றினோன் பயிற்றுநர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தர் தரங்க, சிவப்பு அட்டையைக் காட்டி அவரை வெளியேற்றினார்.