தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 கொடுப்பனவு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள தாமரை கோபுர வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசம் கண்காட்சி’ தொடர்பில் கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்கள் 200 ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 கொடுப்பனவு வழங்க முன்மொழியப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் சில எதிரப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் முன்மொழியப்பட்டது.
சஜித் பிரேமதாசவின் கட்சியானது மலையக மக்களின் ஆதரவை முற்றாக இழந்து போன ஒரு கட்சியாக இன்று மாறியுள்ளது.
இந்த தருணத்தில் சஜித் பிரேமதாச தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்.
எதிர்வரும் காலங்களில் தோட்டத் தொழிவாளர்களுக்கு இதைவிட அதிகமான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி நாட்டின் தேயிலை உற்பத்திக்கு உதவு வருகின்றனர்.
கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வறுமையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்.
By C.G.Prashanthan