தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கல்டன் – டிகொக் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து டிகொக் மற்றும் தலைவர் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய டிகொக் அரை சதம் கடந்தார். பவுமா 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டிகொக் சதம் அடித்து அசத்தினார்.
அவர் 106 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பிரேவிஸ் 29 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 271 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 39.5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 75 ஓட்டங்களையும், விராட் கோலி 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் சிறப்பாட்டக் காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக விராட் கோலியும் தெரிவாகினர்.
குறித்த வெற்றியின் மூலம் இந்த தொடரை 2 க்கு 1 என்ற அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றது.