சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
“இரண்டு மாதங்களில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போனாலும், அடுத்த ஆறு வாரங்களுக்கு சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு கையிருப்பை (Buffer stock) நாம் களஞ்சியப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு எரிபொருள் கையிருப்புகளைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நெருக்கடி தீவிரமடையாத பட்சத்தில், இந்த பாதுகாப்பு கையிருப்புகளைப் பாதுகாப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சியடையாத வகையில் முன்னெடுக்க வேண்டிய பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
சீரான பொருளாதாரப் பயணத்தின் சில இடங்களில் தடைகள் ஏற்படலாம், மோதல்கள் உருவாகலாம். இதனால் சில பொருளாதாரக் கஷ்டங்கள் தோன்றக்கூடும்.
பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்படாமல் அனைத்தும் சுமுகமாக நடைபெற வேண்டுமாயின், வலுசக்தி விநியோகம் பழைய முறையிலேயே தொடர வேண்டும். எரிபொருள் விலை அதிகரிப்பால் சில துறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் அல்லது விநியோகச் சங்கிலியில் ஏற்படும் முறிவு காரணமாக சில துறைகள் வீழ்ச்சியடையலாம்.
இது குறித்து ஆய்வு செய்து, மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள் தொடர்பாக கலந்துரையாட விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.