யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் இருந்த நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, போர் முடிவடைந்த பின்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீளப் புனரமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் வலி வடக்கு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
நினைவுத் தூபியை சேதப்படுத்தியவர்களை உடனடியாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதுடன், அதனை மீளப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.