ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 அல்லது 10 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு நாட்டுக்கு வருகைதரவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு என்பது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், மனித உரிமைகள், ஆட்சியியல் நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் சந்திப்பில் குறிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு தொடர்பிலும் ஆராயப்படும்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு சந்திப்பு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் பிருசேல்ஸில் நடைபெற்ற நிலையில், இவ்வருடம் அதனைக் கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கமைய மேற்படி கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் பங்கேற்பதற்காக எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 அல்லது 10 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருந்து அரசாங்க அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், வர்த்தக சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளனர்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் வருகைக்கு முன்னர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரெனோ அரசாங்கத்துடன் சந்திப்பொன்றை நடாத்தவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.