சுவீடனின் மன்னர் பதினாறாம் கார்ல் குஸ்டாஃப் (King Carl XVI Gustaf) மற்றும் அரசி சில்வியா (Queen Silvia) ஆகியோர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
நேட்டோ மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதிலும் ஒரு புதிய வியூகக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதிலும் இந்தப் பயணம் கவனம் செலுத்துகிறது.
இந்த அரச தம்பதியை ரைடோ ஹாலில் (Rideau Hall) பிரதம நீதியரசர் ரிச்சர்ட் வாக்னர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு உரையாற்றிய மன்னர் கார்ல் குஸ்டாஃப், சுவீடன் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேர விண்ணப்பித்தபோது, கனடாவே முதலில் ஒப்புதல் அளித்த நாடு என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு சுவீடன் தனது நீண்டகால நடுநிலைத் தன்மையைக் கைவிட்டு நேட்டோவில் இணைந்தது.
பிரதமர் மார்க் கார்னி, சுவீடன் மன்னர் மற்றும் அரசியைச் சந்தித்து, பாதுகாப்பு முதல் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் வரை பல முக்கியத் துறைகளை உள்ளடக்கிய புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.