பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு என்றால் எதனையும் செய்ய முடியாது. பின்வாங்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ இதற்கும் மேல் பெரிய சண்டியர் போன்றே வந்தார். இறுதியில் பின்கதவால் படகில் தப்பிச் செல்லும் நிலைமையே அவருக்கு ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
முழு நாடும் ஒன்றாக என்று போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் பேலியகொட மாநகர சபை உறுப்பினரின் கணவன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை ஒரு மாதத்திற்கு முன்னர் தெகிவளை கல்கிசை நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான நிலைமையில் போதைப்பொருள் குற்றவாளிகளின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பொலிஸ் மாஅதிபர் கூறியுள்ளார்.
இப்போதுதான் அவருக்கு அது தெரிகின்றது. இதற்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து செவ்வந்தி உள்ளிட்ட குற்றக் கும்பலை சேர்ந்தவர்கள் அழைத்து வரும்போது புகைப்படங்களை வெளியிட்டு பொலிஸாரே பிரசாரங்களை செய்த பின்னரே பொலிஸ்மா அதிபருக்கு இப்போது அது நினைவுக்கு வந்துள்ளது.
பேலியகொட நகரசபையின் குறித்த உறுப்பினர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதுபோன்று தெஹிவளை கல்கிசை நகர உறுப்பினர் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் கைது செய்யப்படும் போது தான் சந்தேகநபர்களின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது .
வரவு செலவுத் திட்ட விடயத்தில் புத்தாண்டுக்கு சலுகைப் பொதியொன்றை வழங்குவதாகவும் அதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டனர்.
ஆனால் அடுத்த புத்தாண்டும் வரப் போகின்றது. ஆனால் இன்னும் மக்களுக்கு அது கிடைக்கவில்லை. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னேற்றமடைந்துள்ள நிறுவனமாக ஶ்ரீலங்கன் விமான சேவை உள்ளது.
அதற்காக 20, 000 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இப்படி நிதி வழங்கினால் அது முன்னேற்றம் காணாமல் இருக்குமா? நாட்டில் 14500 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கிய பணத்தை பிரித்து பார்தால் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 17 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் நிதியை வழங்கியிருக்கலாம்.
தற்போது வெங்காய விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் அநுராதபுரம் மற்றும் மாத்தளையை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஆனால் அவர்களால் அந்த விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. தம்புளை சந்தையில் உள்ளவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தும் நிலைமை உருவாகியுள்ளது. பொருளாதார மத்தியநிலையம் தொடர்பில் தேவையற்ற வேலைகளை செய்யப்போய் அங்கிருக்கும் அனைவரையும் கோபத்திற்கு உள்ளாக்கப் போகின்றனர்.
முடியாத விடயங்கள் இருந்தால் ஒரு அடியையாவது பின்னால் கொண்டு செல்வோம். மக்கள் எதிர்ப்பு என்றால் அதனை எப்படியும் செய்ய முடியாது. பின்வாங்க வேண்டும். கோதாபய ராஜபக்ஷ இதற்கும் மேல் பெரிய சண்டியர் போன்றே வந்தார். இறுதியில் பின்கதவால் படகில் தப்பிச் செல்லும் நிலைமையே அவருக்கு ஏற்பட்டது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
இதேவேளை பிணையின்றி கடன் வழங்குவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் எவருக்காவது பிணையின்றி கடன் கிடைத்துள்ளதா? இல்லையே.மைத்திரிபால சிறிசேன பொலனறுவையை சேர்ந்தவர். அவர் அந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளார். அதேபோன்று மகிந்தவும் அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்துள்ளார். அத்துடன் கோதாபய ராஜபக்ஸ கொழும்பில் அபிவிருத்தி செய்துள்ளார்.
நீங்கள் நாளுக்கு நாள் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமை வரும். உங்களுக்கு அதிகளவில் மக்கள் வாக்களித்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கில் மக்கள் வாக்குகளை வழங்கினர். நீங்கள் அந்த சாதனைகளை உடைத்துக்கொள்ள வேண்டாம்.
நிமல் சிறிபால டி சில்வா போன்றோர் உங்களை போன்று சாதனை வாக்குகளை பெற்றனர். இறுதியில் இப்போது வீட்டில் இருக்கின்றார். இதுபோன்ற நிலைமை உங்களுக்கு வரும். இப்போது நாங்கள் காட்டுச் செடிகள், நீங்கள் தங்கச் செடிகள். ஆனால் இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் காட்டுச் செடிகளாகி, நாங்கள் தங்கச் செடிகளாகிவிடுவோம் என்றார்.