எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தப் பேரணி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுகேகொடை ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த “எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி…
அரசின் மீது நம்பிக்கை; எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம்
”அரசாங்கம் தற்போது ஒரு சிறப்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டில் தற்போது ஆட்கடத்தல்கள் இல்லை.”
”அரசாங்கம் நல்ல பணிகளைச் செய்து வரும் நிலையில், நவம்பர் 21ஆம் திகதி நடத்தப்படும் பேரணிகள் மூலம் இந்தக் கட்டுமானங்களை உடைத்தெறியவோ, சீர்குலைக்கவோ இடமளிக்க முடியாது.”
”எனவே, 21ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நாங்களும் மக்களைக் கொழும்பிற்குக் கூட்டி வருகிறோம். மக்களைத் திரட்டி, அரசாங்கத்திற்கான ஆதரவை உரக்க உரைப்போம்… ‘நடிக்க வருபவர்கள் வர வேண்டாம்’ என்று நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம்.”
தொடர்ந்தும் அவர் பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்த அரசியல் விமர்சனங்கள் மற்றும்
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்கையில் ”இராதாக்களும் திகாம்பரங்களும் ‘அடி வாங்க நேரிடும்’ என்ற பயத்தினால் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.” ”மனோ கணேசன் போன்ற தலைவர்களுக்கும், திகாம்பரம் போன்றோருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.”
எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களின் ‘குறுகிய மனப்பான்மையும் பொறாமையும் தான் என்று அவர் சாடினார்.
“சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் அப்பதவிக்குத் தகுதியற்றவர்,” என்றும் கருணாநிதி வலியுறுத்தினார்.
அதேபோல, “நாமல் ராஜபக்ஷவின் கனவு அடுத்த ஜனாதிபதியாவது தான். அது நடந்தால், நாட்டில் உள்ள நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்,” என்றும் அவர் தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார்.
By C.G.Prashanthan