கிளிநொச்சி, குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரங்கள் மீது விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தின் போது அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, மணல் ஏற்றிக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களைக் கைது செய்ய முற்பட்ட வேளையில், அவை அதிரடிப்படையினரின் கட்டளையை மீறித் தப்பியோட முயன்றுள்ளன. இதனைத் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு உழவு இயந்திரத்தின் பின் சில்லு மற்றும் இயந்திரப் பகுதி ஆகியவற்றில் ரவைகள் துளைத்துள்ளன. இதன்போது ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.