செவ்வாய்க்கிழமை கனடா மத்திய அரசு கியூபாவுக்கான பயண எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மின்சாரம், எரிபொருள் மற்றும் உணவு, தண்ணீர், மருந்து போன்ற அடிப்படை தேவைகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், அது விடுதிகளையும் பாதிக்கக்கூடும் என்று கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
“கியூபாவில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,” என்று அந்த அறிவுறுத்தல் குறிப்பிடுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சிதைந்த உள்கட்டமைப்பு காரணமாக கியூபாவில் தினமும் பரவலான மின்தடைகள் ஏற்படுகின்றன. சுற்றுலா வருகை குறைவு, அமெரிக்காவின் கடுமையான தடைகள் மற்றும் நாணய ஒன்றியத்திற்கான உள்ளக நிதி சீர்திருத்தத்தின் தோல்வி ஆகியவை ஏற்கனவே தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க எச்சரிக்கைக்குப் பிறகு, பல பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்ததாகவும், ரத்து செய்ய முயற்சிப்பதாகவும், அல்லது இந்த ஆண்டு பயணம் சவாலாக இருக்கலாம் என்ற புரிதலுடன் தொடர்ந்தும் செல்லவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.