கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் பிளாஸ்மா வழங்கிய பிறகு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நால்வரில் மூவர் மணிடோபா மாகாணத்தில் உயிரிழந்ததாக ஹெல்த் கனடா தெரிவித்துள்ளது.
இந்த தகவல், அந்த உயிரிழப்புகளில் இரண்டு சம்பவங்கள் கூட்டாட்சி கட்டுப்பாட்டு அமைப்புக்கு நான்கு மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டதாக சிபிசி நியூஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்ததையடுத்து வெளியாகியுள்ளது. அவற்றில் ஒன்று அக்டோபரில் நடந்தது; மற்றொன்று ஜனவரி 30 அன்று இடம்பெற்றது.
நான்கு உயிரிழப்புகளில் ஒன்று கியூபெக்கில் இடம்பெற்றதாகவும் ஆனால் அந்த சம்பவம் எப்போது நடந்தது என்பதை ஹெல்த் கனடா தெரிவிக்கவில்லை.
பிளாஸ்மா சேகரிக்கும் அனைத்து மையங்களும், தானம் வழங்கும் போது அல்லது தானம் வழங்கிய பின்னர் 72 மணி நேரத்திற்குள் நன்கொடையாளர் கடுமையான உடல்நல சீரின்மையை அனுபவித்தால் அதை கூட்டாட்சி கட்டுப்பாட்டு அமைப்பிற்கு கட்டாயமாக அறிவிக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களில் ஒருவராக 22 வயதான ரோடியாத் அலபேடே இருந்தார். அக்டோபர் 25 அன்று டெய்லர் அவென்யூவில் உள்ள கிரிஃபோல்ஸ் பிளாஸ்மா தான மையத்தில் பிளாஸ்மா வழங்கச் சென்றபின் அவர் உயிரிழந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
அந்த மையத்திலேயே அவரது இதயம் செயலிழந்ததாகவும், பின்னர் அவரை மீட்டெடுக்க முடியவில்லை என்றும் மருத்துவர்கள் அவரது நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வின்னிபெக்கில் சமீபத்தில் உயிரிழந்த மற்றொரு நபர் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த ஆண்டு ஜனவரியில், இனோவேஷன் டிரைவில் உள்ள கிரிஃபோல்ஸ் நிறுவனத்தின் மற்றொரு மையத்தில் பிளாஸ்மா வழங்கிய பிறகு அந்த சம்பவம் நடைபெற்றதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.