பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டிக் காலப்பகுதியில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பாடசாலைகளின் கௌரவத்தையும் நற்பெயரையும் பாதுகாக்கும் வகையில் வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய, பொது இடங்களில் பாடசாலையின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். வீதிகளில் சத்தமிடுவதையோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதையோ தவிர்க்க வேண்டும்.
ஏனைய பாடசாலை மாணவர்களுடன் தர்க்கங்கள் அல்லது மோதல்களில் ஈடுபடக்கூடாது.
லொறிகள், ட்ரக்டர் வண்டிகள் அல்லது ஏனைய வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
செல்லுபடியாகும் ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
விளையாட்டு மைதானங்களுக்குள் மதுபானம் அல்லது போதைப்பொருட்களை வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், புகைத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனைய பாடசாலைகளைத் தூண்டும் வகையிலோ, அவதூறு பரப்பும் வகையிலோ அல்லது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலோ சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், பெற்றோருக்கான விசேட வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தமது பிள்ளைகளின் செயற்பாடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து அவதானிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பிள்ளைகள் உரிய நேரத்திற்கு வீடு திரும்புவதை உறுதிப்படுத்துமாறும், வாகன ஊர்வலங்களின்போது மேலதிகப் பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் எவராயினும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.