மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்லவுள்ளனர். இவர்கள் கேரளாவில் மிகவும் எச்சரிக்கையாக சென்று வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி இருமுடி கட்டி வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்கள் என நாள்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அம்மாநில சுகாதாரத் துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது நீர்நிலைகளில் குளிக்கும் போது மூக்கு வழியாக தண்ணீர் உள்ளே சென்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் மூளையை திண்ணும் அமீபா பரவி வரும் சூழலில், பலரும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கேரளாவில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் மாநில அரசு சார்பில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏதாவது உடல்நலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தாலோ, மருந்துகள் உட்கொண்டு வந்தாலோ, அதுதொடர்பாக ஆவணங்கள் உடன் சபரிமலைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க வருவதற்கு முன்பாக சிறிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
சபரிமலை என்பது அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாம்பு கடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் பாம்பு கடிக்கு மருந்துகள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் சபரிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் ஆங்காங்கே முகாமிட்டுள்ளனர். எனவே ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பான பயணத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை உடன் பிரதான நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.