நாட்டின் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் தடையாக இருப்பதாகவும், இதன் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற கலாநிதி சந்திமா விஜய குணவர்தனவின் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முதல் தற்போதுள்ள மத்திய கிழக்கு போர் வரை ஐந்து பெரும் துயர்நிறைந்த சம்பவங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் கடலோரங்களில் எரிவாயு மற்றும் எரிபொருள் வளங்கள் காணப்படுவதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் மற்றும் சிலரின் சுயநலப் போக்குகள் காரணமாக இந்த வளங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
வழக்கமான தத்துவங்களுக்குள் முடங்கிக்கிடக்காமல், நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி உணவு மற்றும் ஏனைய தேவைகளில் தன்னிறைவு அடைய முயற்சிப்பதே தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும்.
உள்நாட்டு வளங்களை ஒதுக்கிவிட்டு ஏகாதிபத்தியக் கருத்துகளைத் திணிக்க ஒரு குழு முயற்சிப்பதாகவும், அவர்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தைச் சிதைக்கச் சூழ்ச்சி செய்வதாகவும் அவர் எச்சரித்தார். இவர்களின் பிடியில் சிக்காமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெளியிடப்பட்ட நூலானது நாட்டின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற சிக்கல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.