கனடிய பிரதமர் மார்க் கார்னி ஏழு முக்கிய எரிசக்தி மற்றும் இயற்கை வளத் திட்டங்களுக்கு விரைவு ஒப்புதல் அளிக்கப் பரிந்துரைப்பதாக, அறிவித்தார்.
நாட்டை பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறச் செய்யவும், அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைக்கவும் இந்த திட்டங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட ஐந்து திட்டங்களும் இந்தப் புதிய திட்டங்களும் மொத்தமாக 116 பில்லியன் டொலர் மதிப்புடையன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ‘ஆக்கிரமிப்பை’ எதிர்கொள்ளும் நிலையில், கனடாவின் பொருளாதார வியூகம் தீவிரமாக மாற வேண்டும் என்று பிரதமர் கார்னி வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான நெருங்கிய வர்த்தக உறவுகள் இன்று கனடாவின் ‘பலவீனங்களாக’ மாறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாற்றங்களைச் செய்வதன் மூலம் கனடாவை ‘எரிசக்தி வல்லரசாக’ மாற்றவும், உயர் தேவை உள்ள முக்கிய கனிமப்பொருட்களின் உற்பத்தியில் உலக சக்தியாக நிலைநிறுத்தவும் இந்தத் திட்டங்கள் உதவும் என பிரதமர் மார்க் கார்னி நம்பிக்கை தெரிவித்தார்.