கனடா மற்றும் அமெரிக்க பொலிஸார் மற்றும் எல்லை பாதுகாப்பு முகவர் நிலையங்கள் இணைந்து நடத்திய எல்லை தாண்டிய கூட்டு புலனாய்வு விசாரணையில், சுமார் 1.7 தொன் சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
‘புராஜெக்ட் பே’ (Project Bay) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, ஒன்ராறியோ (Ontario) மாகாண வரலாற்றிலேயே ஒரே விசாரணையில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு $139 மில்லியனுக்கும் அதிகம் (கனடிய டொலர்கள்) என பொலிஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கனடா-அமெரிக்க எல்லையூடான சட்டவிரோத போதைப்பொருள் இறக்குமதி மற்றும் கடத்தலை இலக்கு வைத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
பின்னணி மற்றும் விசாரணை:
-
ஜனவரி 2025: ஒன்ராறியோவின் வின்சர் (Windsor) நகர பொலிஸார் இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
-
பிப்ரவரி 2025: எல்லை தாண்டிய கடத்தல் வலைப்பின்னலைக் கண்டறிய கனடா எல்லை சேவைகள் முகவரகம் (CBSA) இந்த விசாரணையில் இணைந்தது.
வர்த்தக லொரி போக்குவரத்துத் துறையை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி, வழக்கமான விநியோகச் சங்கிலிகள் (Legitimate supply chains) மூலமாக சட்டவிரோத போதைப்பொருட்களை எல்லை கடத்துவதற்கு ஓட்டுநர்களைப் பயன்படுத்தியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சர்வதேச அளவிலான கூட்டு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி’ (Homeland Security) மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவான DEA ஆகியவற்றுடன், ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்திய பொலிஸாரும் முழுமையான ஆதரவை வழங்கினர்.
சோதனை நடவடிக்கைகள்:
-
ஜூன் 25: வின்சர், கொருன்னா, லேசால், பிராம்டன் மற்றும் கிளீன்பர்க் ஆகிய பகுதிகளில் உள்ள 18 வீடுகள் மற்றும் வணிக இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
-
ஜூலை 14: மார்க்கம் மற்றும் கலிடன் பகுதிகளில் 2 சோதனை பிடியாணைகள் பயன்படுத்தப்பட்டன.
-
ஜூலை 20: பிராம்டன் பகுதியில் மேலும் 2 சோதனைகள் நடத்தப்பட்டன.