அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்வோம். சுபநேரம் பார்த்துக்கொண்டிருக்காமல் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்துகிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு சகல எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு.பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாட்போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது. அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துக்கொள்வோம்.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை பழிவாங்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகிறது. குறிப்பாக ராஜபக்ஷர்களை எந்த வகையில் நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்பதற்கு அரசாங்கம் அதிக காலத்தை செலவிடுகிறது.
எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.அப்போது தான் எமக்கு அடுத்த தேர்தல்களில் எவ்வித குற்றச்சாட்டுக்களுமில்லாமல் முன்னிலையாகலாம்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாக அமைய வேண்டும். மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு தீர்வாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.